படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்... விலா எலும்பு உடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி !

amitabh bachchan

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'பிராஜெக்ட் கே' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌ 

இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இன்றைக்கும் இளமை துடிப்புடன் நடித்து வரும் அவர், தனது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'பிராஜெக்ட் கே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

amitabh bachchan

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் நேற்று ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் அமிதாப் பச்சன் விபத்தில் சிக்கினார். இதனால் வலியால் துடித்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமிதாப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விலா எலும்புகள் உடைந்ததை கண்பிடித்தனர்.‌ இதையடுத்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் மும்பையில் அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

 இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து அமிதாப், 'பிராஜெக்ட் கே' படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் எனக்கு விலா எலும்புகள் உடைந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது எனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். வலி இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்களாகும் என நினைக்கிறேன். அதனால் நல விரும்பிகள் யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே 'பிராஜெக்ட் கே' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Share this story