மீண்டும் குளு குளு பயணம்... சாலைகளில் பறக்க தயாராகும் ஏசி பேருந்துகள்!

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் (ஏசி) இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்காக பேருந்துகளைத் தயார்படுத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
govt bus
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் (ஏசி) இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்காக பேருந்துகளைத் தயார்படுத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் உச்சத்தில் இருந்தது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட சமயம் நாளொன்றின் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது. அதேபோல உயிரிழப்புகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த ஒருசில நாட்களிலேயே கடும் ஊரடங்கை அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து வேறு எதுவும் இயங்கவில்லை.

Government AC buses will run between districts and states from October 1 ||  அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள்  இயக்கம்

பேருந்து, ரயில் என எந்தவிதமான போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. உள்ளூர் சேவைகள் கூட நிறுத்தப்பட்டன. மீண்டும் இ-பாஸ் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அரசு முடிவெடுத்தது. அதன்படி ஜூன் மாதம் முதல் படிபடியாக பேருந்து சேவையைத் தொடங்கியது. ஆரம்பத்தில் உள்ளூர்களுக்கான சேவை பின் வெளியூர்களுக்கான சேவை என கவனத்துடன் தொடங்கப்பட்டது. 

இருப்பினும் 50% பயணிகளை மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. குளிர்ச்சியான சூழலில் கொரோனா எளிதில் பரவும் என நிபுணர்கள் எச்சரித்ததே இதற்குக் காரணம். தற்போது கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டதால் மீண்டும் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் (அக்.1) கட்டுப்பாடுகளுடன் அரசு குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

நாளை சாலைகளில் பறக்க தயார்படுத்தும் வண்ணம் குளிர்சாதன பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி, பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அதேபோல அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள குளிர்சாதன பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.