ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லதா மங்கேஷ்கர்... எதற்காக தெரியுமா ?
பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் ரசிகர்களால் ஏன் கொண்டாடப்படுகிறார் என்ற தகவல் இதோ..
இந்தியாவில் அரை நூற்றாண்டாக தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் லதா மங்கேஷ்கர். கடந்த 1929-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். 1942-ஆம் ஆண்டு மராத்தி பாடல் ஒன்றின் மூலம் முதல்முறையாக சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு இந்தி படங்களில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து வரிசையாக பாடல்களை பாட ஆரம்பித்தார்.

இவரது இனிமையான குரலால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் இந்தி டப்பிங் படங்களில் பாடினாலும், முதல்முறையாக பிரபு நடிப்பில் வெளியான ‘ஆனந்த்’ படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இளையராஜா இசையில் உருவான ‘ஆராரோ ஆராரோ’ என்ற அந்த பாடல் ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்கா இடம்பிடித்துள்ளது.

இதையடுத்து கமலின் சத்யா படத்தில் ‘வளையோசை’, என் ஜீவன் பாடுது உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள இவரை இந்தியாவின் நைட்டிங்கேள் என்று ரசிகர்கள் அழைத்தனர்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தனது சிறு வயது முதல் பாடி வரும் இவர், கிட்டதட்ட 65 ஆண்டுகளை கடந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் தற்போது நம்மோடு இல்லை என்றாலும் தன்னுடைய பாடலால் பல நூறாண்டுகள் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை.


