புதிய ஓடிடி தளம் துவங்கியுள்ளார் ஷாருக் கான்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தற்போது இந்தியா ஓடிடி நிறுவனங்களின் மிகப் பெரிய மார்க்கெட் ஆக மாறியுள்ளது. அமேசன் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அதற்கு கொரோனா பெருந்தொற்று காலம் முக்கிய அடித்தளமாக அமைந்தது. தற்போது சாமானிய மக்களும் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்ட பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தங்கள் மொழிகளில் கண்டு களிக்கின்றனர். இந்த அசுர வளர்ச்சிக்கு ஓடிடி தளங்கள் தான்முக்கியக் காரணம். எனவே இந்தியாவில் உள்ள பிரபல நடிகர்களும் புதிய ஓடிடி நிறுவனங்களைத் தொடங்கி வருகின்றனர்.
தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் ஆஹா என்ற ஓடிடி தளத்தை உருவாக்கி உள்ளனர். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் தமிழிலும் கால் தடம் பதித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி தளம் ஒன்றை துவங்கியுள்ளார். எஸ்ஆர்கே பிளஸ் என்று தளத்திற்கு பெயர் வைத்துள்ளார். ஓடிடி உலகில் எதோ நடக்க போகிறது என்று தெரிவித்ததுடன் தளத்தின் லோகோவையும் வெளியிட்டுள்ளார்.
ஷாருக் கான் ஏற்கனவே சொந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் அணி உள்ளிட்டவை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாருக் அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.