துப்பாக்கி பட வில்லனுக்கு நிச்சயதார்த்தம்!
நடிகர் வித்யுத் ஜம்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் வித்யூத் ஜம்வால். முக்கியமாக அனைவர்க்கும் பிடிக்கும் ஆக்ஷன் ஹீரோ. வித்யூத் தமிழில் பில்லா 2 படத்தின் மூலமாக அறிமுகமானார். அதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
அதையடுத்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார்.
இந்நிலையில் வித்யுத் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வித்யுத், நந்திதா மஹ்தாணி என்ற ஆடை வடிவமைப்பாளரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஆக்ராவில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதையடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
வித்யுத் சமீபத்தில் ஆக்ஷன் ஹீரோ பிலிம்ஸ் என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். சங்கல்ப் ரெட்டி இயக்கும் புதிய திரைப்படமான 'ஐபி 71'- என்ற படத்தைத் தயாரிக்கிறார். குதா ஹபிஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.