சினிமாவில் இருந்து தற்காலிக ஒய்வு தான் : நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி விளக்கம்
![vikrant masi](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/21477d361c2138373d9b4f9dac35444c.png)
பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸ்ஸி. மேலும் குறும்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்தார். மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்த இவர், 12த் ஃபெயில் படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். பின்பு சமீபத்தில் வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை பிரதமர் மோடி பார்த்து பாராட்டியிருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “கடந்த சில வருடங்களும் அதற்கு பின்னால் நடந்த விஷயங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களின் ஆதரவிற்கு நன்றி. நான் முன்னோக்கி செல்ல வேண்டும் என யோசிக்கையில், ஒரு கணவராக, தந்தையாக, மகனாக மற்றும் நடிகராக வீட்டிற்கு போக இதுதான் சரியான நேரம் என்பதை புரிந்து கொண்டேன்.
2025ல், கடைசியாக ஒருவரை ஒருவர் சந்திப்போம். என்னுடைய கடைசி இரண்டு படங்கள் இருக்கிறது. அதோடு இத்தனை ஆண்டுகள் நிறைய அழகான தருணங்கள் இருக்கிறது. எல்லாத்துக்கும் நன்றி” என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிப்பிலிருந்து தற்காலிகமாக மட்டுமே விலகியிருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், “நடிப்புதான் எல்லாமே எனக்கு கொடுத்துள்ளது. எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நான் சிறிது ஓய்வு எடுக்க விரும்பினேன். ஆனால் என்னுடைய முந்தைய பதிவு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அதாவது நான் நடிப்பை விட்டு விலகுகிறேன் என்றும் அல்லது நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் அப்படி இல்லை. நான் என்னுடைய உடல் நலத்திலும் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட விரும்புகிறேன். பின்பு எனக்கு தோன்றும் போது சரியான நேரத்தில் மீண்டும் நடிக்க வருவேன்” என்றுள்ளார்.