`8 ஆண்டுகள் மணவாழ்க்கை' - நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி வழக்கு

urmila
பாலிவுட் நடிகை ஊர்மிளா மாதோன்கர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மும்பை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு இருவரும் சில காலம் சேர்ந்து வாழ்ந்தனர். அதனைத் தொடர்ந்தே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மொஹ்சினுக்கு ஊர்மிளாவை விட 10 வயது குறைவு. இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்த போதிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அது அப்போது பாலிவுட்டில் பேசுபொருளானது. ஆனால் இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊர்மிளா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த விவாகரத்து கோரும் மனுவை ஊர்மிளா தாக்கல் செய்யவில்லை.oormila
 
இருவரும் என்ன காரணத்திற்காக விவாகரத்து கோரினர் என்று தெரியவில்லை. திருமணமாகி 8 ஆண்டில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் குழந்தை கிடையாது. இருவரும் 2014ம் ஆண்டு பாலிவுட் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் உறவினர் ஒருவரின் திருமணத்தில் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். இருவரும் சந்திக்க மனீஷ் மல்கோத்ராவும் முக்கிய காரணமாக இருந்தார். அதோடு மொஹ்சினும், மனீஷ் மல்கோத்ராவும் இணைந்து தொழில் செய்து வருகின்றனர். 1990களில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஊர்மிளா கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மும்பையில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதனை தொடர்ந்து ஊர்மிளா சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Share this story