சல்மான் கானின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்... திரைக்கதை எழுதும் பாகுபலி எழுத்தாளர்!
'ஆர்ஆர்ஆர்' படத்தை அடுத்து விஜயேந்திர பிரசாத் 'பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு கதை எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியில் சல்மான் கான் நடிப்பில் 2015-ம் ஆண்டு 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரையிலும் சல்மான் கானின் மிகசிறந்த படங்களில் ஒன்றாக அப்படம் இருந்து வருகிறது.
சல்மான் கானின் வழக்கமான ஆக்ஷன் மசாலா படமாக அல்லாமல் உணர்வுபூர்வமான கதைக்களம் கொண்ட படமாக அப்படம் அமைந்திருந்தது. பாகுபலி படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தான் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கும் திரைக்கதை எழுதியிருந்தார்.
தற்போது மூத்த எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில், தற்போது அவர் பஜ்ரங்கி பைஜானின் அடுத்த பாகத்திற்காக பணியாற்றி வருவதாகத்தெரிவித்துள்ளார் . சல்மான் கானுடன் இந்த படம் குறித்து விவாதித்தபோது அவர் அதில் ஆர்வம் காண்பித்ததாகவும் இரண்டாம் பாகத்திற்கு திரைக்கதை எழுதுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே விஜயேந்திர பிரசாத் தான் பஜ்ரங்கி பைஜான் இரண்டாம் பாகத்திற்கு திரைக்கதை எழுத தொடங்கியுள்ளாராம்.
ராஜமௌலி தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் விஜயேந்திர பிரசாத் தான் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.