முழு படப்பிடிப்பையும் முடித்த ‘பெல்பாட்டம்’ படக்குழு… அக்ஷய் மற்றும் படக்குழுவினர் உற்காசத்தில்!
ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இயக்குனர் ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பெல்பாட்டம்’. இப்படத்தில் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாண்டில் நடைபெற்று வந்தது. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் படம் இதுவாகும்.
கொரோனா பரவல் காரணமாக விமானங்கள் சேவை இல்லாததால் பிரைவேட் ஜெட் மூலம் ஸ்காட்லாந்து நாட்டிற்கு படக்குழு சென்றனர். அங்கு சென்ற பின் 15 நாட்களுக்கு மொத்த படக்குழுவும் தனிமையில் இருந்துள்ளனர். 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த நஷ்டத்தை சமாளிக்க தனது 18 ஆண்டுகால சினிமா வாழ்வில் 8 மணி நேரத்திற்கு மேல் நடிக்க கூடாது என்ற தீர்மானத்தைத் தளர்த்தி இரண்டு ஷிஃப்ட்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக்கொடுத்தார் அக்ஷய் குமார்.
தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். மேலும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பெல்பாட்டம் படத்தின் புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ள அக்ஷய் குமார் “தனி ஆளாக நம்மால் சிறிய காரியங்களையே செய்ய முடியும், ஆனால் குழுவாக இணைந்தால் அதிகமாக செய்ய முடியும். இது குழுவாக செய்த வேலை, இதற்காக படத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் மிகவும் நன்றிக் கடன் பட்டவனாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் போஸ்டரில் அமேசான் ப்ரைம் தளத்தின் லோகோ இருப்பதால் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.