அக்ஷய்குமார்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகி வந்த ரக்ஷாபந்தன்... படப்பிடிப்பு நிறைவு!
அக்ஷய்குமார் குமார் நடிப்பில் உருவாகி வந்த ரக்ஷாபந்தன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
நடிகர் அக்ஷய்குமார், இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து முடித்தார். அதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் ரக்ஷாபந்தன் என்ற படத்தில் இணைந்தனர். கடந்த ஆண்டு ரக்ஷாபந்தன் தினத்தில் வெளியான அக்ஷய் குமார் நடிக்கும் ‘ரக்ஷாபந்தன்’ பட அறிவிப்பு வெளியானது.
சகோதர்களின் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் பூமி பாட்நகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“நம் வாழ்க்கையில் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் எளிதாகவும் நம்மை பாதித்த ஒரு படத்தை பார்ப்பது மிக அரிது. இந்தப் படம்தான் எனது சினிமா வாழ்க்கையில் நான் விரைவில் நடிக்க சம்மதித்த படம். இந்தக் கதை உங்களை சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் அழுகவும் வைக்கும். சகோதர சகோதரிகள் பெற்றவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் என்பதை இந்த படம் உங்களுக்கு உணர்த்தும்."என்று படத்தைப் பற்றி அக்ஷய் குமார் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ரக்ஷாபந்தன் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் வைத்து முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

