அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' இந்தி டப்பிங் வெளியாகாது... படக்குழு அறிவிப்பு!
அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் இந்தியில் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புஷ்பா திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் பெற்றது.
குறிப்பாக இந்தப் படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே அல்லு அர்ஜுனுக்கு வட இந்தியாவில் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறதாம். எனவே 'அலா வைகுந்தபுரம்லோ' படக்குழுவினரும் இந்தச் சூழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்து படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்தனர். வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் இந்தி டப்பிங் வெளியாகும் என்றும் அறிவித்தனர்.
தற்போது அலா வைகுந்தபுரம்லோ திரைப்படமே இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலா வைகுந்தபுரம்லோ படத்தின் இந்தி உரிமை மணீஷ் ஷாவிடம் விற்கப்பட்டது. ஆனால் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் அலா வைகுந்தபுரம்லோ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. எனவே படத்தை இந்தி டப் செய்து வெளியிட்டால் படத்திற்கு இந்தி ரீமேக்கிற்கு வரவேற்பு கிடைக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.