பிரபாஸ் குறித்து சர்ச்சைக் கருத்து: அர்ஷத் வார்ஸி விளக்கம்
நடிகர் பிரபாஸ் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானதைத் தொடர்பாக அர்ஷத் வார்ஸி விளக்கமளித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தினை பல்வேறு திரையுலகினரும் கொண்டாடி தீர்த்தார்கள்.‘கல்கி 2898 ஏடி’ குறித்து இந்தி நடிகர் அர்ஷத் வார்ஸி, “கல்கி படம் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. அமிதாப் பச்சனை என்ன சொல்வது. என்னால் அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியவில்லை. பிரபாஸை பற்றி சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு ஜோக்கர் போல இருந்தார். ஏன் அப்படி? நான் ஒரு ‘மேட் மேக்ஸ்’ போன்ற படத்தை காண விரும்பினேன். மெல் கிப்ஸன் படத்தை பார்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்? எனக்கு புரியாத விஷயங்களை ஏன் அவர்கள் செய்கிறார்கள்?” என்று தெரிவித்திருந்தார்.
இது இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. தெலுங்கு திரையுலகினர் பலரும் அர்ஷத் வார்ஸியை கடுமையாக சாடினார்கள். இது தொடர்பாக மேலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் அர்ஷத் வார்ஸி. தற்போது தனியார் விருது வழங்கும் விழாவில், ‘கல்கி 2898 ஏடி’ சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கிறது. நான் கதாபாத்திரம் குறித்துதான் பேசினேனே தவிர, பிரபாஸை பற்றி அல்ல. அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும். ஒரு நல்ல நடிகருக்கு தவறான கதாபாத்திரத்தைக் கொடுக்கும்போது, அது பார்வையாளர்களுக்கு மனவேதனையைத் தருகிறது.” என்று பதிலளித்துள்ளார் அர்ஷத் வார்ஸி.