ஷாருக்கானுடன் விரைவில் படத்தை தொடங்கும் அட்லி.. பணிகள் விறுவிறு!
ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தை இந்த வருட இறுதியில் அட்லி தொடங்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லி. தனது முதல் படமான ‘ராஜா ராணி’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு விஜய்யுடன் இணைந்த அவர்,‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தன்னை சிறந்த இயக்குனராக நிலைநிறுத்தி கொண்டார்.
இதற்கிடையே விஜய்யின் 66-வது படத்தையும் அட்லி இயக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் அது வெறும் தகவலாக மட்டுமே இருக்கிறது. அதேநேரம் ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து மும்பையில் ஷாருக்கானை சிலமுறை அட்லி சந்தித்துள்ளார். அப்போது ஒரு பிரம்மாண்ட கதை கூறியிருக்கிறார். இந்த கதை ஷாருக்கானுக்கு பிடித்துவிட உடனே ஓகே சொல்லிவிட்டார். இருந்தப்போதிலும் கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து சொன்ன மாற்றங்களையும் செய்துவிட்டு சமீபத்தில் ஷாருக்கானை சந்தித்துள்ளார் அட்லி. அப்போது ‘பதான்’ படத்தை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங்கை தொடங்கலாம் என ஷாருக்கான் கூறியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த அட்லி உடனடியாக பணிகளை தொடங்கி செய்து வருகிறராம். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.