அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் அட்லி. தொடர் வெற்றியையடுத்து தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக்கொண்ட அட்லி, தற்போது இந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே கோலிவுட்டில் விஜய்யை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அட்லி, தற்போது ஷாருக்கானை இயக்குவதால், இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தில் அட்லியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் விஷ்ணு பணியாற்ற உள்ளார். முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளை கவனிக்க மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க துபாய் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் துவங்கும் இந்த படப்பிடிப்பு 180 நாட்கள் வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே டீசர் மற்றும் ப்ரோமோஷனுக்கான படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கான், இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக தமிழின் முன்னணி ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது தெரிந்த விஷயம். இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் நயன்தாரா கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு ஹீரோயினாக நடிகை சானியா மல்ஹோத் இணைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் ‘தங்கல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.