வீட்டு தனிமையில் இருந்த அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதி… படக்குழுவினர் 45 பேருக்கும் தொற்று உறுதி…
கொரானாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த நடிகர் அக்ஷய்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. 2வது அலை வீசி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முன்பு இருந்தது போல முக கவசம் அணிவது, கை கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளை தீவிர கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
தற்போது கொரானா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படும் விகிதம் அதிகரித்து வருகிறது. முக்கிய பிரமுகர், நடிகர், நடிகைகளும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமீர்கான், கோவிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமாரும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்தார். இதையடுத்து வீட்டு தனிமையில் இருந்து வந்த அக்ஷய் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோன்று அவரோடு ராம் சேது படப்பிடிப்பில் பங்கேற்ற 100 பேருக்கு கொரானா சோதனை நடத்தப்பட்டது. இதில் படக்குழுவினர் 45 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தற்போது வீட்டு தனிமையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.