பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கத்திக்குத்து பட்ட பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான் பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரை கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.