கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ரிலீஸ்: செப்.25-க்கு முடிவெடுக்க சென்சார் போர்டுக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவு
கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்தை வெளியிடுவது குறித்து செப்டம்பர் 25-ம் தேதிக்குள் முடிவெடுத்து படத்தின் தயாரிப்பாளரிடம் தெரிவிக்குமாறு சென்சார் போர்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள், “சென்சார் சான்றிதழை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது.
இந்தக் கால தாமதத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். இந்தப் படத்தை வெளியிட முடியாது என நீங்கள் தைரியமாக சொல்லிவிடுங்கள். உங்கள் முடிவை நாங்கள் மதித்து, அது குறித்து ஆய்வு செய்வோம். ஆனால், சென்சார் போர்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. செப்டம்பர் 25-ம் தேதிக்குள் படத்தை வெளியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து ஏதாவது ஒரு முடிவு எடுத்து படத்தின் தயாரிப்பாளரிடம் அறிவித்து விடுங்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.