'பிரம்மாஸ்திரா' படத்தில் பார்வதியாக நடிக்கும் தீபிகா படுகோனே!

நடிகை தீபிகா படுகோனே பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது. அந்தப் படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகர் தயாரித்துள்ளார்.
படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஈஷா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்துள்ளார். பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார். எனவே முதல் பாகத்தின் இறுதியில் அவர் சிறப்பு தோற்றத்தில் காணப்படுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இரண்டாம் பாகத்தில் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் பிரம்மாஸ்திரா முதல் பாகம் வெளியாகிறது.