“அல்லு அர்ஜுனுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - அமிதாப் பச்சன்
“அல்லு அர்ஜுனுக்கு நானே பெரிய ரசிகன், அவரோடு ஒப்பிட வேண்டாம்” என்று பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.உலகளவில் 1,800 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. சமீபத்தில் நடைபெற்ற குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் ஒருவர் “நான் அல்லு அர்ஜுன் மற்றும் உங்களுடைய தீவிர ரசிகன்” என்று குறிப்பிட்டார். அதற்கு அல்லு அர்ஜுனுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்
அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமிதாப் பச்சன், “அல்லு அர்ஜுன் அபாரமான திறமையான கலைஞர், அவருக்கு மிகவும் தகுதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நானும் அவருடைய தீவிர ரசிகன். சமீபத்தில், அவரது படம் வெளியானது (புஷ்பா 2: தி ரூல்), நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், அதைப் பார்க்க வேண்டும். ஆனால், என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்தளவுக்கு அல்லு அர்ஜுனை பாராட்டியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திரையரங்க சர்ச்சையில் சிக்கி, சிறைக்கு சென்று வந்தார் அல்லு அர்ஜுன். இப்போது வரை அந்தச் சர்ச்சை முழுமையாக முடிவடையவில்லை.