‘குட் பை ட்விட்டர்’... இன்றிலிருந்து விலகுவதாக கரண் ஜோஹர் அறிவிப்பு !

ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக பிரபல பாலிவுட் இயக்குனரான கரண் ஜோஹர் அறிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முக்கிய முகமாக இருப்பவர் கரண் ஜோஹர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என திரையுலகில் பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த ‘குச் குச் ஹோத்தா ஹை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதையடுத்து ஏராளமான திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். சமீபகாலமாக சிறந்த பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர இவர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சி இந்தியில் மிகவும் பிரபலமானது. இதில் பங்கேற்காத பிரபலங்களே கிடையாது எனலாம்.
இந்நிலையில் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கரண் ஜோஹர், திடீரென ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள கடைசி பதிவில், அதிக பாசிட்டிவ் எனர்ஜிகளை பெற விரும்புகிறேன். அதன் முதல் படியாக ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அண்மைக்காலமாக ட்விட்டரில் பாலிவுட் சினிமாவிற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.