விவசாயிகள் நம்முடைய உணவு வீரர்கள்… விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ப்ரியங்கா சோப்ரா!
நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், திரைத்துறை பிரபலங்களும் கூட விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு ஆதரவு தெரிவித்திருந்தார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் விவசாயிகளுக்கு ஆதரவான தங்கள் கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போது நடிகை பிரியங்கா சோப்ராவும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். “விவசாயிகள் நமது உணவு வீரர்கள். விவசாயிகளின் அச்சங்கள் நீங்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரிவினைகளைப் பொருட்படுத்தாமல் திரைத்துறை பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டிசம்பர் 8 ஆம் தேதி ‘பாரத் பந்த்’(வேலை நிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.