கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸிற்கு பணியாற்றிய கிராபிக்ஸ் டீமை நாடும் பிரபாஸ் படக்குழு!?
சமீபத்தில், பிரபாஸ் மற்றும் பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் அப்டேட் வெளியானது. அந்தப் படம் ராமாயணக் கதை அடிப்படையில் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு ‘ஆதிபுருஷ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம்.
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் கடவுள் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.நடிகை கீர்த்தி சுரேஸை சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் VFX-க்காக செலவிடப் படுவதாகக் கூறப்பட்டு வந்தது. 200 கோடிக்கும் மேல் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். தற்போது படத்தின் இயக்குனர் ஓம் ராத் சர்வதேச அளவில் பிரபலமான ஒரு கிராபிக்ஸ் குழுவை இந்தப் படத்திற்கு வேலை செய்யவைக்க முயன்று வருகிறாராம்.
நம் அனைவர்க்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸைப் பற்றி நன்கு தெரியும். ஒரு வெப் சீரிஸில் இந்தளவிற்கு பிரம்மாண்டம் காட்டியிருப்பார்கள். தற்போது ஆதிபுருஷ் படத்திற்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸிற்கு பணியாற்றிய வான்கூவர் கிராபிக்ஸ் குழுவை நியமிக்க விரும்புகிறாராம். இது நடந்தால் பிரபாஸ் உலகளவில் பிரபலம் அடைவதில் ஐயமில்லை.