கலவரத்திலும் கல்லா கட்ட களமிறங்கும் இயக்குனர்கள்… ரியா சக்ரபோர்த்தி வாழ்க்கையை படமாக எடுக்க நடக்கும் போட்டி!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்கள் குரல் எழுப்பியதை அடுத்து வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் இந்த வழக்கு போதைப்பொருள் கோணத்திற்கு மாறியது. அதையடுத்து இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பிரபலங்களின் பெயர் போதைப்பொருள் விவகாரத்தில் வெளியானது.
கடந்த சில மாதங்களாக அனைத்து பத்திரிகைகளிலும் ரியா தான் தலைப்புச் செய்தியாக இருந்து வந்தார். ரியா சக்ரபோர்த்தியின் வழக்கு இந்தியாவையே உலுக்கி வருகிறது. மேலும் ரியாவுக்கு பெரிய போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தியின் இந்த வழக்கை மையப்படுத்தி படம் எடுக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்களாம். எந்த சர்ச்சை நிகழ்ந்தாலும் அதை படமாக எடுத்து லாபம் பார்க்கும் பல இயக்குனர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது ரியா குறித்து படம் எடுக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனராம். ரியா சக்ரபோர்த்தியிடம் முறையாக அனுமதி பெற்ற பின்பு படவேலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி படமாக எடுத்தால் சுஷாந்தின் மரணத்திற்காக உண்மையான காரணம் படத்தில் வெளியாகுமா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.