இமாச்சல பிரதேச அரசு கங்கனாவிற்கு பாதுகாப்பு வழங்கும்… அம்மாநில முதலமைச்சர் உறுதி!
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு தங்கள் மாநிலத்தில் பாதுகாப்பு வழங்க இமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவர் மும்பைக்கு வருகை தரும் போது பாதுகாப்பை நீட்டிக்க பரிசீலித்து வருவதாகவும் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
“கங்கனா இமாச்சல பிரதேசத்தின் மகள் மற்றும் ஒரு பிரபலமானவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் கடமை” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் தாகூர், கங்கனா ரணாவத்தின் சகோதரி மற்றும் அவரது தந்தை இருவரும் அவருக்கு பாதுகாப்பு கோரி அரசாங்கத்தை அணுகியுள்ளனர் என்று கூறினார். “கங்கனாவின் சகோதரி நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினாள். அவரது தந்தையும் பாதுகாப்பு கோரி மாநில போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்தார். எனவே அவருக்கு மாநிலத்தில் தனது பாதுகாப்பை வழங்குமாறு டிஜிபியிடம் கேட்டுள்ளேன்” என்றார்.
கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் மறைவிற்கு பாலிவுட் திரைப்பட மாஃபியா கும்பல் தான் காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ரவுத் கங்கனாவை எதிர்த்துப் பேசிய பின்னர் தற்போது அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கங்கனாவுக்கு மும்பை காவல்துறை மீது நம்பிக்கை இல்லையென்றால் மும்பைக்கு வர வேண்டாம் என்று சிவசேனா தலைவர் அறிவுறுத்தினார். அதையடுத்து கங்கனா மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இது கங்கனா மீது அக்கட்சியினர் கருத்து தாக்குதல் நடத்த தூண்டுகோலாக அமைந்தது.
இதையடுத்து தான் செப்டம்பர் 9 ம் தேதி மும்பைக்கு வர இருப்பதாகவும் முடிந்தால் தடுக்குமாறும் சவால் விடுத்திருந்தார். தற்போது கங்கனா மும்பைக்கு வருகை தரும் போது அவருக்கு பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.