புதிய அவதாரம் எடுக்கும் ‘கங்கனா’ … இந்திராகாந்தியாக நடிக்கிறார்…
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வேடத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இப்போது உள்ள நடிகைகளெல்லாம் ஹீரோயினை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத்தும் இதுபோன்ற துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது கங்கனா துணிச்சலோடு நடித்து வரும் படம் ‘தலைவி’. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்தசாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கங்கனா, மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கங்கனாவின் ரிவால்வர் ராணி படத்தை இயக்கிய சாய் கபீர் இயக்குகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படம் இல்லை என்றும், அரசியல் படமாக உருவாகிறது என கூறப்படுகிறது. ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில் இந்திராகாந்தி காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன.