மறைந்த பாலிவுட் நடிகரின் பங்களா ரூ.400 கோடிக்கு விற்பனை

மறைந்த பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்தின் பங்களாவை மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று 400 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1950 மற்றும் 60-களில் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர் தேவ் ஆனந்த். பாஸி, ஜால், டாக்ஸி டிரைவர், உள்ளிட்ட ஏராளமான திரைப்டங்களில் அவர் நடித்துள்ளார். 60 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பல்வேறு படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு தனது 88வது வயதில் தேவ் ஆனந்த் காலமானார்.
இந்த நிலையில் மும்பையில், ஜூஹு பகுதியில் தேவ் ஆனந்த் வாழ்ந்த பங்களா உள்ளது. 40 ஆண்டுகாலம் தேவ் ஆனந்த் வாழ்ந்த அந்த வீடு, அவரது மறைவுக்குப் பிறகு பராமரிப்பு இன்றி இருந்தது. இந்நிலையில், அந்த பங்களாவை மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று ரூ.400 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பங்களாவை இடித்துவிட்டு அந்த இடத்தில் 22 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.