போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக் கான் மகனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!
போதைபொருள் வழக்கில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாக மும்பை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து கப்பலில் சோதனை செய்த போது ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக எட்டு பேரை கைது செய்து மும்பை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆரியன் கானும் ஒருவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். நீதிமன்ற காவல் முடிந்து ஜாமின் கோரி ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆஜரான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கறிஞர், ஆரியன் கான் தொலைப்பேசியில் உள்ள குறுந்தகவல் மூலம் சர்வதேச அளவில் போதை பொருள் பயன்பாடு குறித்தும், 2020ஆம் ஆண்டு ஏராளமான போதை பொருள் வாங்க முயன்றதும் தெரியவந்துள்ளது என்று வாதிட்டார்.
மேலும் விசாரணைக்கு அவருக்கு காவலை நீட்டிக்க கோரிக்கையும் வைத்தார். கோரிக்கையை ஏற்று அவரை அக்டோபர் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கவும் மறுத்துவிட்டது. இச்சூழலில் மீண்டும் ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கைதுசெய்யும் போது ஆரியன் கான் கையிலிருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை" என்று தெரிவித்தார். ஆனால் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜாமின் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.