‘தூம் 4’-ல் ரன்பீர் கபூர்: படக்குழு திட்டம் என்ன?

பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற ‘தூம்’ சீரிஸ் படங்களின் அடுத்த பாகத்தை தொடங்க படக்குழு முடிவு செய்து, ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் ‘தூம்’ சீரிஸ். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திலுமே அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா காவல் துறை அதிகாரிகளாக நடித்திருந்தார்கள். வில்லனாக முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் ரோஷன், மூன்றாம் பாகத்தில் ஆமிர் கான் ஆகியோர் நடித்திருந்தார்கள். 2013-ம் ஆண்டு 3-ம் பாகம் வெளியானது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தூம்’ சீரிஸ் படங்களைத் தொடங்க யஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதில் வில்லனாக நடிக்க ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். தற்போதுள்ள காலத்துக்கு ஏற்ற வகையில் இப்போதைய இளம் நாயகர்கள் இருவரை காவல் துறை அதிகாரிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யவுள்ளது படக்குழு. அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளார்கள்.
மூலக்கதையை ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கிறார். இதனை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கவுள்ளார். இப்போதைக்கு திரைக்கதையை இறுதி செய்து, படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ‘தூம் 4’ படத்தினைத் தொடங்கும் முன்பு ‘ராமாயணம் 1’, ‘ராமாயணம் 2’ மற்றும் ‘லவ் அண்ட் வார்’ ஆகிய படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளார் ரன்பீர் கபூர். மேலும், ‘தூம் 4’ படத்தினை தனது 25-வது படமாகவும் முடிவு செய்துள்ளார்.