சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் ராமாயணா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல புராணக் கதையான ராமாயணம் திரைப்படமாக உருவாகவுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. பாலிவிட்டில் நமிட் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் சன்னி தியோல் அனுமனாகவும், பாபி தியோல் கும்பகர்ணனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ராமாயணா புராணக் கதைக்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 1987இல் வெளியான ராமாயணா தொடரில் ராமனாக நடித்த அருண் கோவில் இப்படத்தில் தசரதனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரமாண்டமாக தயாராகும் ராமாயணா படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இரண்டு பாகங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராமாயணா முதல் பாகம் வரும் 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும், இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு சாய் பல்லவி நடித்து வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் சாய் பல்லவி நடிக்கவுள்ள ’ராமாயணா’ திரைப்படம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.