ராவணன் குறித்த கருத்தால் எழுந்த சர்ச்சை… மன்னிப்புக் கோரிய பிரபல பாலிவுட் நடிகர்!
பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தான் ராவணன் குறித்து பேசிய கருத்திற்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், சைப் அலி கான் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்தப் படம் சரித்திர புராணமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே பிரபாஸ் ராமராக நடிக்கும் போது சைப் அலி கான் வில்லன் ராவணனாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான போஸ்டரில் பத்து தலையுடன் ராவணன் மற்றும் ராமர் வில்லுடன் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
சில தினங்களுக்கு முன் சைப் அலி கான் ஆதிபுருஷ் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேட்டி அளித்திருந்தார்.
அதில் “இயக்குனர் ஓம் ரவுத் வில்லன் கதாபாத்திரத்தை மனிதாபிமானம் உள்ளவனாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றியுள்ளார். ஒரு அரக்கன் ராஜாவாக நடிப்பது சுவாரஸ்யமானது, அதில் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும். ஆனால், நாங்கள் அவரை மனிதாபிமானமுள்ளவர்களாக ஆக்குவோம். ராவணனின் சகோதரி சுர்ப்பனகைக்கு லக்ஷ்மனால் மூக்கு துண்டிக்கப்பட்டது. அதனால் தான் அவர் சீதாவைக் கடத்தியதையும், ராமுடனான போரையும் இந்தப் படத்தில் நியாயப்படுத்துகிறார்.” என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராவணனை உயர்வாகக் கூறி ராமனை தரம் தாழ்த்திவிட்டார் என்று பலர் போர்க்கொடி தூக்கினர்.
அதையடுத்து தற்போது அந்த பேட்டி குறித்து சைப் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.
அறிக்கை பின்வருமாறு:
” இதற்கு முன்னர் நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், பலரது உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அறிகிறேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்தக் கருத்துக்களைச் சொல்லவில்லை. எல்லோரிடமும் மனமார்ந்த மன்னிப்பு கேட்பத்துடன் எனது கருத்தைத் திரும்பப் பெறவும் விரும்புகிறேன். ராம் பகவான் எனக்கு எப்போதும் நீதியின் மற்றும் வீரத்தின் அடையாளமாக இருந்து வருகிறார். ஆதிபுருஷ் என்பது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் கொண்டாடுவதாகும். மேலும் காவியத்தை எந்தவிதமான சிதைவுமின்றி முன்வைக்க முழு அணியும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.