சல்மான் கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்... நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் கூட்டணி !
பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் கடைசியாக அவர் இயக்கிய மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் ரஜினியின் 'தர்பார்' ஆகிய திரைப்படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை.
அதேநேரம் விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த 'தளபதி 65' படமும் கைகூடவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது இதை ஒரு பேட்டியில் இயக்குனர் ஏஆர் முருகதாஸும் உறுதிப்படுத்தினார். அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான 'கஜினி' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்தார். அமீர்கான் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போதே சல்மான் கானை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை இயக்கியதால் அந்த முயற்சி கைகூடவில்லை. அதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.