‘டைகர் 3’-க்கு பிறகு விஷ்ணு வரதனுடன் கூட்டணி அமைக்கும் சல்மான்... எகிறும் எதிர்பார்ப்பு !
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், தற்போது ‘டைகர் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘ஏக் தா டைகர்’ படத்தின் மூன்றாவது பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து கேத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மணீஷ் சர்மா இயக்கியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரானா காரணமாக தாமதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்தியை தவிர தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு யாருடைய இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் தமிழில் அஜித்தின் ‘பில்லா’, ‘பில்லா 2’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார். கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கிறிஸ்துமசையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.