சல்மான் கானின் சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்திற்கு திரைக்கதை எழுதும் ராஜமௌலியின் தந்தை!
'ஆர்ஆர்ஆர்' படத்தை அடுத்து விஜயேந்திர பிரசாத் 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுத இருப்பதாக சல்மான் கான் அறிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு இந்தியில் சல்மான் கான் நடிப்பில் 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரையிலும் சல்மான் கானின் சினிமா கேரியரில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அப்படம் இருக்கிறது.
சல்மான் கானின் வழக்கமான ஆக்ஷன் மசாலா படமாக அல்லாமல் உணர்வுபூர்வமான கதைக்களம் கொண்ட படமாக அமைந்ததால் படத்தை மக்கள் கொண்டாடினர். பாகுபலி படத்தின் எழுத்தாளர், இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் 'பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கும் திரைக்கதை எழுதியிருந்தார்.
பின்னர் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் விஜயேந்திர பிரசாத் தான் இரண்டாம் பாகத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சல்மான் கான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று ஆர்ஆர்ஆர் படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு விஜயேந்திர பிரசாத் தான் திரைக்கதை எழுதுவதாக அறிவித்தார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.