ஷாரூக்கானின் ‘கிங்’ படத்தின் இயக்குநர் மாற்றம்!
ஷாரூக்கான் நடிக்கவுள்ள ‘கிங்’ படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார் ஷாரூகான். இதில் ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய படங்கள் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. இப்படங்களைத் தொடர்ந்து ‘கிங்’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் ஷாரூக்கான்.
ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சுஜாய் கோஷ் இயக்கவுள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளை ‘பதான்’ இயக்குநர் சித்தார்த் ஆனந்த் வடிவமைக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சண்டைக் காட்சிகளை வடிவமைக்க ஒப்பந்தமான சித்தார்த் ஆனந்த்தே இப்போது ‘கிங்’ படத்தை இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷாரூக்கானுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.