கேஜிஎப் 2, பீஸ்ட் படங்களுக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாகித் கபூரின் 'ஜெர்சி' திரைப்படம்!

ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ஜெர்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இந்திய அளவில் பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளார். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தற்போது ஷாகித் கபூர் நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜெர்சி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். பாலிவுட்டில் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி ஜெர்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.