‘கிங்’ படத்துக்காக பிரம்மாண்ட திட்டங்கள் - ரிலீஸ் எப்போது?
‘கிங்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து, வெளியிடுவது தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது படக்குழு. 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் ‘பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டங்கி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.இதனைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்க பலரும் கதைகள் கூறி வந்தாலும், எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியாக, மகள் சுஹானா கான் அறிமுகமாகும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார் ஷாருக்கான்.நீண்ட மாதங்களாக இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுஜாய் கோஷ் இயக்கவுள்ள இதில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பினை அடுத்த ஆண்டு ஜனவரியில் மும்பையில் தொடங்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.
இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்காக யாருமே படப்பிடிப்பு செய்யாத சில இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். அனைத்து பணிகளையும் முடித்து 2026-ம் ஆண்டு ஈத் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கு ஏற்ப பணிகளை பிரித்து பணிபுரிய படக்குழு இப்போதே திட்டமிட்டு முடிவு செய்துவிட்டது.