நடிகர் சன்னி தியோலுக்கு ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை..
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வந்தனர். அந்தவகையில், , பஞ்சாபைச் சேர்ந்த பாலிவுட் நடிகரும் எம்.பியுமான சன்னி தியோல் ‘நான் பாஜக பக்கமும் நிற்கிறேன்; விவசாயிகள் பக்கமும் நிற்கிறேன்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ”நான் பாஜக பக்கமும் நிற்கிறேன். விவசாயிகள் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியப்பின் அரசு சரியான நடவடடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. பாஜக விவசாயிகள் நலனில் அக்கறைக்கொண்டது. இது எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை. இதில் யாரும் தலையிட வேண்டாம். இப்பிரச்சனையில் பலர் நன்மைகளை அடைய முயன்று பிரச்னைகளை உருவாக்க முயல்வதை நான் அறிவேன்” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்த ட்விட்டை பார்த்த பலரும் ’சன்னி தியோல் இரட்டை முகம் கொண்டவர், முதுகெலும்பில்லாதவர்’ என்று கடுமையாக விமர்சித்தும் மீம்ஸ்களாக கலாய்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சன்னி தியோலின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இவருக்கு எதிராகவும் பல்வேறு தீவிரவாத குழுக்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்ததால், சன்னி தியோலுக்கு ‘ஒய்-பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.