இந்தியாவிலேயே கதாநாயகி மையப் படத்திற்கு இவ்வளவு தொகை இந்தப் படத்திற்கு தான்...கெத்து காட்டும் டாப்ஸி!
டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ரஷ்மி ராக்கெட் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது தியேட்டருக்கென்று உருவாக்கப்பட்ட படங்களும் கூட ஓடிடி-யை நோக்கி படையெடுத்து வருகின்றன. தென்னிந்தியாவில் சூர்யா மற்றும் ப்ரித்விராஜ் இருவரும் தாங்கள் தயாரிக்கும் படங்களை ஓடிடி-யில் வெளியிட்டு புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ரஷ்மி ராக்கெட்' படம் பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.நந்தா பெரியசாமி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்தப் படம் ராஜஸ்தானில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், தடகள வீராங்கனையாக மாற போராடும் கதை என்று கூறப்படுகிறது. ஒரு கல்லூரியின் கதை, வண்ண ஜிகினா மற்றும் மாத்தி யோசி போன்ற படங்களை இயக்கிய நந்தா, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
தற்போது இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபலமான ஓடிடி நிறுவனமான ZEE5 தளம் அந்தப் படத்தை வாங்க 58 கோடி கொடுக்க இருப்பதாகவும் பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படத்திற்கு இவ்வளவு தொகை கொடுக்க இருப்பது இந்தியாவிலேயே இது தான் முதல்முறை என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க நடிகையைத் தேர்வு செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.