விஜயின் ‘மாஸ்டர்’ படத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ; என்னசெய்யப்போகிறார் சல்மான் கான்.!?
இளையதளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். அதற்காகவே தூங்காமல்,வீட்டுக்குப் போகாமல் போஸ்ட் புரடக்சன் பார்த்தார் இயக்குனர். ஆனால்,யாரும் எதிர்பார்க்காத கொரோனா தொற்று பரவியதால் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் போனதும், வேறு வழியில்லாமல் அமேஸான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் பண்ணப்போவதாக தயாரிப்பாளர் அறிவித்த அன்றே திரையரங்க உரிமையாளர்கள் பஞ்சாயத்து வைக்க, அப்புறம் விஜய் தலையிட்டு கண்டிப்பாக பொங்கல் அன்று தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல அந்தப் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
நூறு சதவிகித ஆடியன்ஸ் வந்தால்தான் போட்ட பணத்தையும் லாபத்தையும் எடுக்க முடியும் என்ற நிலையில், அதற்கான கோரிக்கையோடு முதல்வரை ரகசியமாக சந்தித்து வேண்டுகோள் வைத்தார் விஜய். அரசு தரப்பிலிருந்து அதற்கு அனுமதி எதுவும் வரவில்லை என்பதால் பதட்டத்தில் இருக்கிறது மாஸ்டர் பட டீம்!
இப்போ, இதே பஞ்சாயத்தோடு பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் படத்துக்கும் இன்னைக்கு ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார்கள் அந்த ஊர் திரையரங்க உரிமையாளர்கள். ‘Radhe :The Most Wanted Bhai’ என்ற இந்தப்படமும் போன வருஷமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம். சல்மான் கான் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தப் படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்போது நிலைமை சரியாகும் என்பது தெரியாததால் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோவுக்கு 230 கோடிக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர். ஓவர் சீஸ், சேட்லைட் எல்லாமே கொடுத்தாச்சு. இந்த ஆண்டு மே 12-ம் தேதி பக்ரீத் அன்று OTT யில் ரிலீஸ் பண்ண நாள் குறித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இப்படியொரு பஞ்சாயத்து!
‘கொரோனா காலத்தில் நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் பல தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்கு. மிச்சம் மீதி உள்ள தியேர்க்காரர்களும் உயிர் வாழணும்னா உங்க படங்கள் தியேட்டருக்கு வந்தால்தான் முடியும். நீங்களே இப்படி பண்ணலாமா’ என்று கோரிக்கை மனு எழுதி எல்லோரும் கையெழுத்துப் போட்டு சல்மான் கானிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள்.
என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கான்.!