திப்பு சுல்தான் பயோபிக் நிறுத்தம் - மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் !
திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கப்போவதில்லை என்று தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் சந்தீப் சிங். பிரபலங்களின் பயோபிக்கில் உருவாகும் திரைப்படங்களை தயாரித்து புகழ்பெற்றவர். அந்த வகையில் பிரியங்கா சோப்ரா நடித்த 'மேரி கோம்', ராஜ்குமார் ராவ் நடித்த 'அலிகார்', பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான 'நரேந்திர மோடி' ஆகிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது பங்கஜ் திரிபாதி நடிக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இது குறித்து பேசியிருந்த சந்தீப் சிங், திப்பு சுல்தானின் இருண்ட பக்கத்தை படமாக்கவுள்ளதாகவும், கோவில்கள், தேவாலயங்களை அழித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்த திப்பு சுல்தானின் வாழ்க்கையை கூற இருப்பதாக தெரிவித்திருந்தார்.

திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 'திப்பு சுல்தான்' படத்தை கைவிட்டதாக தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் என்னையும், என் குடும்பத்தையும் அச்சுறுத்துவதை தவிர்க்குமாறு சகோதர, சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன். நான் யாருடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கவேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்தியர்களாக நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

