உண்மை சம்பவத் தொடர்; நெட் ஃபிளிக்ஸுக்கு பறந்த சம்மன்
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அர்விந்த் சுவாமி, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘ஐசி 814: காந்தகார் ஹைஜாக்’ (IC 814: The Kandahar Hijack). இத்தொடர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1999ஆம் திரிபுவனிலிருந்து டெல்லி வரை செல்வதற்காக புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமத்தை ஐசி 814, பாக்கிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கடத்தினர். இதை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா, இத்தொடரில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் முஸ்லிம் அடையாளங்களை மறைக்க மாற்றுப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பு இந்துக்கள் தான் விமானத்தை கடத்தியவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகை மற்றும் பா.ஜ.க. எம்.பியுமான கங்கனா கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கு மட்டும் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க சுதந்திரமிருப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் நெட் ஃபிளிக்ஸ் தலைமை அதிகாரியிடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அத்தொடருக்கு எதிராக ஒரு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு ‘பேன் நெட்பிளிக்ஸ்’ என்று ஹேஸ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.