பிரபல பெங்காலி இயக்குனர் தருண் மஜூம்தார் மறைவு!
பிரபல பெங்காலி இயக்குனர் தருண் மஜூம்தார் காலமானார். அவருக்கு வயது 92.
வங்காள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்த தருண் மஜூம்தார் நேற்று காலமானார். அவர் பெங்காலி மொழியில் 'பாலிகா பாது', 'ஸ்ரீமான் பிருத்விராஜ்', 'தாதா கீர்த்தி', 'வல்பசா வல்பசா', 'ஆலோ' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 4 தேசிய விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.

1990ம் ஆண்டு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கௌரவம் பெற்றார். அவருக்கு சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மறைவு, திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

