இந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதி சூப்பர் ஹிட் படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

vikram
இந்தியில் ரீமேக்காகும் ‘விக்ரம் வேதா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  

நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’. கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். போலீஸ், கேங்ஸ்டர் ஆகிய இருவரின் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

 

படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. நீண்ட நாட்கள் முன்னரே இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரானாவால் இந்த படத்தின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இந்தி படத்தையும் இயக்கவுள்ளனர். 

முதற்கட்ட பணிகள் நடைபெற்ற வந்த  இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஷாரூக்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் கதை பிடிக்கவில்லை என மறுத்துவிட்டார். அதன்பிறகு அமீர் கானிடம் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வேதா கேரக்டரில் ஹிரித்திக் ரோஷனும், விக்ரம் கேரக்டரில் சயீப் அலிகானும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த படத்தின்  படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு செப்டம்பர் 2022-ல் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story