பர்ட்ஸ் பார்ட் ஹிட்... செகண்ட் பார்ட் எப்படி இருக்கு?... 'ஜீவி 2' திரை விமர்சனம்!

நடக்குற சம்பவங்களுக்கெல்லாம் ஒரு தொடர்பியல் விதி இருக்குன்னு புது ரூட்டில் கதை சொன்ன படம் தான் 'ஜீவி'. ப்ரொட்யூசர், டைரக்டர், ஹீரோ எல்லாமே புதுசு. ஆனாலும், இண்டஸ்ட்ரி முழுக்க பேசப்பட்ட படம். மூணு வருசத்துக்கு அப்புறம்: பார்ட் டூ வந்திருக்கு.பிரமாண்டமாக 'மாநாடு' படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் இந்தப் படத்தோட புரட்யூஸர்.
ஃபர்ஸ்ட் பார்ட் பார்க்காமல் ஸ்ட்ரெயிட்டா உள்ள வர்றவங்க குழம்பிறக் கூடாதுங்கறதுக்காக, டைட்டில் போடும் போதே 'வாய்ஸ் ஓவரில்' முன் கதை சுருக்கம் சொல்லியிருப்பது நல்ல யுக்தி.
இதுக்கு மேலயும் துயரம் வேண்டாம், களவாண்ட வீட்டுல இருக்கிற கண் தெரியாத புள்ளையைக் கல்யாணம் பண்ணி எல்லா பஞ்சாயத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வப்போம்ன்னு ஃபர்ஸ்ட் பார்ட்டை முடிச்சிருப்பார் இயக்குனர். பார்ட் 2 அந்தக் கல்யாணத்தில் தான் ஆரம்பிக்குது.
பேச்சிலர் வாழ்க்கையில் எப்படி வேணாலும் இருக்கலாம்… கல்யாணத்துக்கு அப்புறம்,அப்படி இருக்கமுடியுமா.!? ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார்.மனைவிக்கு கண் ஆபரேஷன்,மாமனாருக்கு மருந்து செலவு,மளிகை வாங்க பணம்னு பணத் தேவைகள் கழுத்தை நெருக்குது.
கடைசியா ஒரு திருட்டைப் போட்டால் தான் பொழப்பை ஓட்ட(!) முடியும்னு நண்பன் கருணாகரனோட சேர்ந்து பிளான் பண்ணி… பணக்கார நண்பன் முபாஷிர் வீட்டில் திருடுகிறார் ஹீரோ வெற்றி. கொள்ளை நடந்த அடுத்த நாள் முபாஷிர் கொலையாகிக் கிடக்கிறார். அங்கிருந்து தொடர்பியல் 'விதி' துரத்த ஆரம்பிக்கிறது. அதற்கப்புறம் என்னவாகிறது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி… பார்ட் த்ரீக்கு லீடு கொடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் வி ஜே கோபிநாத்.
ஹீரோ வெற்றி ஃபர்ஸ்ட் பார்ட்டைவிட இதில் கொஞ்சம் தேர்த்திருக்கிறார். இது மாதிரி கதைகள் என்றால் ஓகே… கதைக்களம் மாறும் போது அதுக்கான தேவையும் மாறும். இன்னும் கொஞ்சம் மெனக்கிட மனசு வச்சா… கோடம்பாக்க ஹீரோக்கள் லிஸ்ட்ல உங்க பேரும் சேர்றதுக்கு வாய்ப்பிருக்கு பாஸ்.கருணாகரன்,மைம் கோபி, ரோகிணி, ஹீரோயின் அஸ்வினி,நாசர் தம்பி ஜவகர்,முபஷிர் என படத்தில் வருகிற ஆர்ட்டிஸ்ட் அத்தனை பேரும் கதைக்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஃபர்ஸ்ட் பார்ட்டில், வெற்றியை வேண்டாம்னு சொல்லிடுப் போன பொண்ணு இந்தப் படத்திலும் ஜஸ்ட் ஒரு ஸீன் தான் வந்து போகிறார். ஏற்கனவே பார்ட் ஒன் பார்த்த அத்தனை பேரும் வெடித்து சிரிக்கிறார்கள். த்ரில்லர்ங்கற பேர்ல படுத்தியெடுக்கும் படங்களுக்கு நடுவே மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி த்ரில்லர் படம் கொடுத்துக்காக இயக்குனர் விஜே கோபிநாத்தைப் பாராட்டலாம்!
-VK சுந்தர்.