அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் கார்த்தி

தனது தந்தை படித்த அரசு பள்ளிக்கு நடிகர் கார்த்தி ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார்.
நடிகர் சிவகுமார் படித்த கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 100ம் ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தி பள்ளி வளர்ச்சிக்காக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இன்று ஏறக்குறைய 65 இலட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. அன்பான சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக உள்ளது.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் உயர்தரமான கல்வி வழங்கப்படுகிறது.மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்தது ஒரு சுகமான அனுபவம். அதற்காக விகடன் விருது பெறுவது என்பது பெரிய சந்தோஷம். முதலில், இயக்குநர் பிரேம் அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். 70-களிலிருந்து 90-கள் வரை வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அழகாக எழுதியதற்கு நன்றி. கதையைச் சொன்னவுடன் படத்தைத் தயாரிக்க முன்வந்த சூர்யா அண்ணாவுக்கும் நன்றி” என்றார்.