கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குறித்து, பிரபல நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மருத்துவக் கல்லூரியின் நான்காவது மாடியில், 31 வயதான பெண் மருத்துவர் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், போலீசார் பெண் மருத்துவர் வழக்கில், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்னும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்பதை நாம் உணர வேண்டும். நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின் பத்து ஆண்டிற்கு பிறகு, மற்றொரு மோசமான சம்பவம், ஆனால் எதுவும் மாறவில்லை" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகை சமந்தா, பாலியல் வன்முறை ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது என பாடகி சின்மயி பதிவை பகிர்ந்துள்ளார். மேலும் பிரபல நடிகை மிருனால் தாகூர், "நாம் எந்த உலகத்தில் வாழ்கிறோம்" என பதிவிட்டுள்ளார். அதேபோல் பிரபல நடிகர் ராம் சரண் மனைவி உபாஸனா கொனிடேலா, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பதிவிட்டுட்டுள்ளனர்.