மரியாதை கிடைப்பதில்லை : நடிகை சிம்ரன் வேதனை..!

1

1997ம் ஆண்டு வெளியான V.I.P திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரன். முதல் படத்தில் ப்ரியா என்ற கேரக்டரில் நடித்ததாலோ என்னவோ, பல படங்களிலும் இதே பெயரிலேயே நடித்து ரசிகர்களின் மனதில் Free-யாகவே இடம் பிடித்துவிட்டார். ஒருசில நடிகைகள் மட்டுமே அறிமுகமானது முதலே டாப் கியரில் பயணிக்க முடியும். அவர்களில் மிகச் சிறந்த உதாரணம் என்றால் அது சிம்ரன் தான். சிம்ரன் என்ற பெயரை விடவும் இடையழகி என்ற புனைப் பெயரில் சித்திரம் போல பதிந்துவிட்டார் இவர்.

முதல் படமான VIP அதிகம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யா ஜோடியாக நேருக்கு நேர், அப்பாஸுடன் பூச்சூடவா, அஜித்துடன் அவள் வருவாளா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வழக்கமாக்கி வைக்கப்பட்டிருந்த மும்பை இறக்குமதி ஹீரோயின் என்ற அடையாளம் தான், ஆரம்பத்தில் சிம்ரன் மீதும் விழுந்தது. ஆனால், பொட்டுவைத்து பூ முடித்து தாவணியோ அல்லது சேலையோ கட்டிவிட்டால் போதும். தமிழ்நாட்டின் எல்லா ஊரும் சிம்ரனுக்கு சொந்த ஊராக இருக்கும் என்றே நினைக்கத் தோன்றும்.
 

இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தென்னிந்திய நடிகர்களின் உழைப்பையோ அல்லது அவர்கள் பல ஆண்டுகளாகக் கட்டிக்காக்கும் நற்பெயரையோ கண்டுகொள்வதில்லை. நான் எனது வாழ்க்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான காலத்தைச் சினிமாவிற்காக செலவிட்டுள்ளேன். அப்படி இருந்தும் உரிய மரியாதை கிடைக்காதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கான அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுகின்றனர் என குற்றம் சாட்டினார். பல முறை இந்திப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை நான் மறுத்துள்ளேன். காரணம் அங்குள்ள சிலரின் மனநிலையுடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. தென்னிந்திய நடிகர்கள் செய்த சாதனைகளுக்கும், அவர்கள் கொண்டுவரும் பாரம்பரியத்திற்கும் பாலிவுட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என கூறினார் 

இதற்கு முன்பாக நடிகர் துல்கர் சல்மான் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களும், பாலிவுட் படப்பிடிப்புத் தளங்களில் அடிப்படை மரியாதை பெறுவதற்கே தாங்கள் பெரிய நட்சத்திரம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது எனப் புகார் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this story