இந்தியாவை பாலிவுட் படங்கள் தவறாக காட்டுகின்றன” - ரிஷப் ஷெட்டி விமர்சனம்
பாலிவுட் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தியாவை தவறாக சித்தரிப்பதாக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி விமர்சித்துள்ளார்.சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “இந்திய திரைப்படங்கள், குறிப்பாக பாலிவுட் படங்கள் பெரும்பாலும் இந்தியாவை தவறாக சித்தரிக்கின்றன. அவை கலைப் படங்கள் என்ற பெயரில் சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு கவனம் பெறுகின்றன. என்னைப் பொறுத்தவரை என் தேசம், என் மாநிலம், என் மொழி ஆகியவை மிகவும் பெருமைக்குரியவை. உலகத்துக்கு அவற்றை ஒரு நேர்மறையான வெளிச்சத்தில் காட்டவேண்டும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன்” என்று தெரிவித்தார்.
ரிஷப் ஷெட்டியின் இந்த கருத்து இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படக் காட்சிகளை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். மேலும் ‘காந்தாரா’ அதிகம் ‘ஹைப்’ செய்யப்பட்ட ஓவர்ரேட்டட் திரைப்படம் என்றும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் சிறந்த கன்னடப் படமாகவும், ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம், ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்காக கர்நாடக மாநிலத்தின் குந்தாபுராவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடிக்கிறார்.