பிரபாஸ் குறித்த விமர்சனம்; நானி தெரிவித்த கருத்து
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருக்கிறார் என பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் படம் எனக்கு பிடிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது விமர்சனம் தெலுங்கு வட்டாரங்களில் பேசு பொருளானது. தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி, இந்திய சினிமாவை உலகப் பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல எல்லாவற்றையும் கொடுத்தவர் பிரபாஸ் என்றும் கல்கி படத்தின் மீது அர்ஷத் வார்ஸிக்கு பொறாமை என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரான நானி தற்போது இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நடிப்பில் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரபாஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நீங்கள் குறிப்பிடும் நபர், அவருடைய வாழ்க்கையில் இது தான் மிகப் பெரிய விளம்பரமாக அவருக்கு இருக்க போகிறது. இது முக்கியமான விஷயம் இல்லை. தேவையில்லாமல் அதை பெருசுபடுத்த வேண்டாம்” என்றார்.