இனி டைரக்டர் அட்லீ இல்ல... டாக்டர் அட்லீ..!

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த இயக்குனர் அட்லீக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது சத்யபாமா பல்கலைக் கழகம். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக் கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தான் இயக்குனர் அட்லீக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அட்லீக்கு ராஜ மரியாதையும் அளிக்கப்பட்டது.
டாக்டர் பட்டம் பெற்ற கையோடு மேடையில் பேசிய அட்லீ, இந்த தருணம் தனக்கு மிகவும் எமோஷனலாக இருப்பதாக கூறினார். பொதுவாகவே நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்தேன்... இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்வார்கள். நான் உண்மையை சொல்கிறேன். என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களை தான் படமாக எடுத்தேன். உதாரணத்திற்கு பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ஜேப்பியாரை பார்த்து உருவாக்கியது தான். அவர் படிப்புக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி விளையாட்டுக்காக அவர் நிறைய விஷயங்களை செய்துள்ளார்.
சத்யபாமா கல்லூரியில் தான் முதலாம் ஆண்டு படித்தபோது, குறும்படம் எடுக்க வேண்டும் என கேட்டதும் என்னை ஜேப்பியாரை சந்திக்க சொன்னார்கள். அவரிடம் போய் சொன்னதும் அவர் கேமரா எடுத்துக்கோ... சீக்கிரம் டைரக்டர் ஆயிடுனு சொன்னார். அவர் சொன்ன வார்த்தை நனவானது. என் அப்பா - அம்மா என்னை டைரக்டர் ஆகும் வரை பார்த்துக் கொண்டார்கள் என்றால், அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவி தான் காரணம். நான் ஒரு நல்ல மனுஷனா மாறியதற்கு முக்கிய காரணம் என் மகன். இதுதவிர என் அண்ணன் - தம்பி பெயரை சொன்னா தெறிச்சிருவீங்க என கூறி என்னுடைய அண்ணன் தளபதி விஜய் என அட்லீ சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தால் அதிர்ந்தது.